Namaste friends,

I wrote this poem, which describes the story of Ramayana in Tamil. Those who know Tamil, pl. read and pass on your valuable comments and improvements. Thanks. (Picture of Sri Rama parivar also drawn by me).

அயோத்தியில் உன் சுப ஜனனம்
இது கற்றோர் அனைவருக்கும் மனனம்
இலக்குவ, பரத, சத்ருகன சகோதரம்
அன்பு கௌசல்யை உன் இனிய மாதரம்
ஆங்கே அடைந்தாய் நீ பதினாறு பருவம்
நல்ல தேக்கில் கடைந்தெடுத்த உருவம்
சீக்கிரமே வந்தான் விசுவாமித்ர முனி
இராக்கதரை யாகத்தினின்று வெல்லும் பணி
சென்றாய் நீ முனிவன் காட்டிய வழி
இல்லை உனக்கு முனிவரை காப்பாற்றாத பழி
அழைத்துச்சென்றான் முனிவனும் சீதையை பார்க்க
அழகான சீதையை உனக்கு தாரை வார்க்க
வென்றாய் நீ வலிய சிவ தனுசு
நன்கு அறிவாய் நீ சீதையின் மனசு
அயோத்திஎங்கும் விழா கோலம்
நீ பெற்ற வெற்றியே எங்கும் ஓலம்
தசரதன் செய்தான் தயார் உன்னை முடி சூட்டுதற்கு
அவன் நினைத்தான் ராஜ்ஜியக்கவலை எனக்கெதற்கு
அவனறியான் கூனியின் சூது, வாது
உன்னைப்போன்ற உத்தமன் ஆங்கு ஏது
ஆயின் சிற்றன்னை பணிந்திட்டாள் காடு
அங்கே சென்றாய் நீ இலக்குவனோடு
தொடர்ந்தாள் சீதை நீ செல்லுமிடம்
ஏனெனில் அன்பில் அவள் நிறைகுடம்
வந்தான் பரதன் தந்தையின் மரணச்செய்தி கொண்டு
அடைந்தான் புளகாங்கிதம் ராமனின் பாதுகைகளை கண்டு
திரும்பினான் பரதன் ராமனின் ராஜ்ஜியம்
பேராசை அவன் மனதில் பூஜ்ஜியம்
காட்டிலோ எங்கு திரும்பியும் ஆபத்து
இலக்குவனை சூர்பனகை சந்தித்ததும் ஒரு விபத்து
உதித்ததங்கே சூற்பனகையின் காமம்
அவளிடம் செல்லவில்லை ஸ்ரீ ராமனின் நாமம்
அடைந்தாள் இலக்குவனிடம் வீழ்ச்சி
இனி வரும் துயரம் அவள் செய்த சூழ்ச்சி
சென்றாள் தமயனிடம் ஓடி
ஏனெனில் அவன் செய்த அக்கிரமம் ஒரு கோடி
ஓதினாள் அவனிடம் சீதையின் அழகு
ராவணனோ தட்டிபறிப்பதில் ஒரு கழுகு
சீதையின் மனது சென்றது ஒரு மானிடம்
அன்று ஜெயித்தது பெண்மனம் என்ற மானுடம்
சென்றான் ராவணன் சீதையை வெல்ல
அவளால் இயலாது அவன் மாறுவேடத்தை சொல்ல
வெல்லுமா அங்கே சீதையின் எண்ண ஓட்டம்
அல்லது நட்பு ஜடாயுவின் போராட்டம்
பறந்தான் ராவணன் இலங்கையை நோக்கி
அன்பு சீதையை தன் கைதி ஆக்கி
அடைந்தாள் சீதை அசோகவனத்தில் பெரும் துயரம்
சூழ்ந்த இராக்கதர்களுக்கு இல்லை அவள் மனத்தின் உயரம்
வந்தான் இராவணன் அனுதினம் அவளுடன் பேச
என்னை மணமுடியவில்லையெனில் நீ என் உணவு என்று ஏச
பொறுத்துப் பார்த்தாள் சீதையும் பலநாள்
ராவணனைத் தட்டிக்கேட்க இல்லை அங்கே ஆள்
ஆங்கே ஸ்ரீ ராமனும் இலக்குவனுடன் கிஷ்கிந்தையில்
காலத்தின் கோலத்தை எப்படி வெல்வது என்னும் விந்தையில்
கேட்டறிந்தான் ராமன் சுக்ரீவனின் எதிரி வாலியை
சுக்ரீவனும் உணர்ந்தான் ஸ்ரீ ராமனென்னும் பலசாலியை
அங்கே நடந்தது தமயனர்களுக்குள் யுத்தம்
ஆங்கே வெற்றி பெற்றது ஸ்ரீ ராமனின் சித்தம்
யுத்தம் முடிந்ததும் வந்தது ராம காதையின் அடுத்த கட்டம்
வீர அனுமனின் கதையே அனைவரின் நாட்டம்
ஆம்! சந்தித்தார் ஸ்ரீ ராமன் பக்த அனுமனை
உணர்ந்தார் ராமன் அனுமனின் பக்கபல துணை
முடிந்தது சுக்ரீவன் பயந்த கார்காலம்
கதிரவன் எங்கும் ஒளி விட வழிவிட்டது மேலும்
சீதையை எங்கும் தேடிச்சென்றது சுக்ரீவனின் குரங்குப்படை
எங்கு தேடியும் பலநாள் கிடைக்கவில்லை விடை
அதனால் செய்தனர் சுக்ரீவனின் சோதரர் ஆலோசனை
அப்போது அனுமன் கூறினான் இலங்கை செல்லும் யோசனை
சென்றான் அனுமன் உயரமான குன்றின் மேலே
கடும்பனியின் தாக்கத்தை தகர்க்கும் கதிரவன் போலே
பறந்தான் அனுமன் ஆழ்கடலை தாண்டி
அன்னை சீதை வாழும் தகவல்களை வேண்டி
கண்டான் அனுமன் சீதையின் சத்திய சோதனை
கற்பென்னும் தீயை அணையாமல் காத்திடும் அவள் வேதனை
மொழிந்தான் அனுமனும் ஸ்ரீ ராமனின் நிலை பற்றி
தந்தனள் சீதையும் தன் ஆபரணம் அவனை மெற்றி
விரைந்தான் அனுமனும் ஸ்ரீ ராமனை நோக்கி
குளிர்ந்தது அவன் மனம் ராமன் துயர் போக்கி
முடிவெடுத்தான் ராமன் இலங்கை செல்ல
அங்கிருக்கும் ராவணனை போரில் வெல்ல
திரட்டினான் ராமன் சீரிய குரங்கு படை
இனி இல்லை அவனுக்கேதும் தடை
சீரிய குரங்கு படை கட்டியது ராமர் பாலம்
அதுவோ ராமனின் மனதைப்போல விசாலம்
ராமனைப் பணிந்தான் ராவணனின் தம்பி
ராவணனின் பெண்ணாசை ஏற்க இயலாதென வெதும்பி
சந்தித்தனர் ராமனும் ராவணனும் போரில்
கண்டதில்லை யாரும் குரங்குகளுடன் மோதும் அரக்கர் தமை பாரில்
போரில் அரக்கன் புரிந்தான் பலவித மாயா ஜாலம்
இருந்தும் ராமனும் போரிட்டான் முனைப்பாக பல காலம்
எய்தான் அம்பை அரக்கன் இலக்குவன் மீது
மலைத்தனர் அனைவரும் இலக்குவனை மீட்கும் வகை யாது
கொண்டுவந்தான் அனுமனும் சஞ்சீவி மலை
மீண்டது அங்கே அன்பு இலக்குவனின் தலை
தொடர்ந்த போரில் வீழ்ந்தது ராவணனின் பக்கம்
இன்று போய் நாளை வா என ராமன் அளித்தான் ஊக்கம்
அப்படியும் உய்யவில்லை ராவணனின் ஞாயம்
விரும்பவில்லை ஸ்ரீ ராமனும் நேரத்தின் விரயம்
இறுதியில் கிடைத்தது ஸ்ரீ ராமனுக்கே வெற்றி
எல்லோரும் பாடுவோம் வாருங்கள் அவன் புகழ் போற்றி
ராமனுடன் சீதையும் இலக்குவன் பாரத சத்ருகன அனுமன் வாழ்க
என்றென்றும் தர்மமில்லா பெண்ணாசை வீழ்க
-- ஸ்ரீ ராமஜயம் --